இலங்கையிலிருந்து லட்சத் தீவிற்கு சென்றார்களா ஐஎஸ் குழுவினர்? - விசாரிக்கும் கடற்படை
28 May,2019
இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் இலட்சத் தீவிற்கு சென்றுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், இலங்கையிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு சொந்தமான இலட்சத் தீவிற்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தி விடயங்களை ஆராய்ந்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்கு பிரவேசித்துள்ளமை குறித்து உத்தியோகப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற வகையில் இந்த விடயத்தை கருத்திற் கொண்டு, தமது கடற்படை உறுப்பினர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரிய பண்டார குறிப்பிட்டார்.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் பயணிக்கும் அனைத்து கப்பல்கள், படகுகளையும் சோதனைக்கு உட்படுத்த தமது பிரிவுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்குமாறும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடற்படையினர், ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டார்.