அமைப்புக்கு தொடர்பு.. புத்த துறவி
25 May,2019
இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை குண்டுவெடிப்பு தாக்குதின் தூண்டுதலாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு என்று அந்த நாட்டின், சர்ச்சைக்குரிய புத்த மத துறவி கலாகொடொட்டே ஞானசாரா பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஏப்ரல் 21ம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று இலங்கை நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த, இலங்கை ராணுவ தளபதி,
"தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்தியாவின் காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது" என கூறினார். அங்கு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கலாம், அல்லது இவர்களுக்கு தொடர்புடையவர்கள் அங்கெல்லாம் இருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் இலங்கையின் சர்ச்சைக்குரிய புத்தமத சாமியார், கலாகொடொட்டே ஞானசாரா, பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு முஸ்லீம் அமைப்பை சேர்ந்த ஆயுப் மற்றும் அப்தீன் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் இங்கு அப்துல் ராசிக் என்பவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். முஸ்லீம்கள் மீது புத்தமதத்தினர் தாக்குதல் நடத்த தூண்ட வேண்டும் என்பதே அவர்கள் வருகை தந்ததன் நோக்கமாக இருந்துள்ளது
. இதன்பிறகு, இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது பின்னர் ஒன்பது தனித்தனியே தலைவர்கள் கட்டுப்பாட்டில் பிரிந்தது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இலங்கை குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது. அதில் தொடர்புள்ள ஏறத்தாழ எல்லோரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்துல் ராசிக் மட்டும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். கடும்போக்குவாதியான,
புத்த துறவி கலாகொடொட்டே ஞானசாரா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக கடந்த ஆண்டு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் ஆகும். இருப்பினும் அவர் 9 மாதங்களை சிறையில் கழித்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும், இப்படி ஒரு பேட்டியை அவர் கொடுத்துள்ளார். ஞானசாராவை விடுதலை செய்ததற்காக சிறிசேனா மீது சிறுபான்மை சமூகத்தினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.