யாழில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கான் அகதிகள்
22 May,2019
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து சென்று தனியார் வீடுகளில் தங்க வைக்கத் தனியார் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கையை வடமாகாண ஆளுநர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
ஆளுநரின் முடிவையடுத்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகளிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அவர்களை வடக்கில் தங்க வைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் வவுனியா கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் ஒரு தொகை அகதிகளைத் தங்க வைப்பதுடன், யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை அகதிகளைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் உள்ளூரில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு ஒரு பகுதி அகதிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்றை யாழிற்கு அழைத்து சென்று, யாழ் நகரிலுள்ள வீடொன்றில் தனி நபர் ஒருவர் தங்க வைத்தார். குறித்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை கொண்டவர்.
யாழ்ப்பாணத்தில் தனியார் வீட்டில் அகதிகளைத் தங்க வைப்பது பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்துமென்பதை யாழ்ப்பாண பொலிஸார் புரிய வைக்க முயன்றும், அகதிகளை அழைத்து சென்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் வடக்கு ஆளுநரின் கவனத்திற்குச் சென்றது. அகதிகளை வடக்கிற்கு அழைத்து சென்று, அரச பராமரிப்பில் வைப்பதற்கு ஆளுநர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தைச் சிக்கலில்லாமல் முடிக்கவே ஆளுநர் முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தனியார் வீடுகளில் அகதிகளைத் தங்க வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விடயத்தை, வீட்டு உரிமையாளரை அழைத்து ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அகதிகளை உடனடியாக வவுனியாவிற்கே அனுப்பி வைத்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு உரிமையாளர் கால அவகாசம் கோரியுள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் கால அவகாசம் வழங்க முடியாதென இறுக்கமாகத் தெரிவித்த ஆளுநர், உடனடியாக அரசாங்கத்தின் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டார்.
இதையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி மையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.