அமைச்சு பதவியிலிருந்து ரிஷாத் இராஜினாமா செய்ய வேண்டும்
21 May,2019
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வணிக, கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்யவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் அத்தகைய கோரிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையினை எதிரணி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களை தனித்தனியாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். தற்போதைய நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, திலக் மாரப்பன ஆகியோர் முன்னர் இராஜினாமா செய்ததைப் போன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் தற்போதைய நிலையில் இராஜினாமா செய்தால் நெருக்கடியினை தவிர்க்க முடியும் என்று இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்த நிலைப்பாடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவிக்கப்பட்ட போது அதனை பிரதமர் நிராகரித்துள்ளார். குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ, அல்லது வேறு எந்த குற்றங்கள் தொடர்பிலோ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில் அவர் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சந்தித்து அதனை தோற்கடிக்கும் வியூகங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.