இரத்த ஆறு பெருக்கெடுக்கும்! - எச்சரிக்கிறது ஜேவிபி
20 May,2019
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வென்றால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோத்தாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.