சற்றுமுன் பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
14 May,2019
பாதுகாப்பின் காரணமாகவே நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது என பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலை குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும்,
மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் நேற்று சில வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு குறித்த பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது. இந்த நிலை முடிவடையும் என நாங்கள் நம்பினோம்.
எனினும், இன்றும் சிலர் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது.
இதன்போது பொலிஸார் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டனர். எனினும், சில தீவிரவாதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். பொலிஸார் அமைதியாக செயற்பட்டமை, பொலிஸார் பலவீனமானவர்கள் என அவர்கள் நினைப்பார்களாயின் அது அவர்களின் முட்டாள்தனம்.
30 வருட யுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கு இந்த சிறிய தீவிரவாத குழுவை ஒழிப்பது பெரிய விடயமல்ல. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலையடுத்து, இனம், மதம் கடந்து பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கினர்.
மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை இல்லாதொழிக்கும் தீவிரவாதிகளின் செயற்பாட்டை இல்லாது செய்ய வேண்டும். நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை.
பயங்கரவாதிகளின் உறவினர்களுக்கு இந்தவேளையில் அறிவிப்பொன்றை விடுக்க விரும்புகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என உங்களின் உறவினர்களுக்கு அறியப்படுத்துங்கள். இல்லையென்றால் சட்டத்தின் தன்மையை காண்பிக்க நேரிடும்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பிணை வழங்காது 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை பொலிஸ் சார்பில் எச்சரிக்கை விடுப்பதாக, பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்