முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்ற வேண்டும் : இராணுவத் தளபதி
13 May,2019
முஸ்லிம் விவகார அமைச்சரை உடன் மாற்றிவிட்டு அந்த அமைச்சுக்கு வேறு படித்த அறிவுள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று இல்லை. வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வழங்கப்படலாம் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (12) சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.
அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தொடர்பில் எமக்கு அடிக்கடி கேட்க முடிகின்றது. தற்போதைய முஸ்லிம் விவகார அமைச்சர் இவை எது தொடர்பிலும் தேடிப் பார்ப்பதில்லை. தெளிவாகச் சொல்வதென்றால், வீட்டு உரிமையாளரே தனது வீட்டைச் சோதனை செய்வது போன்றது.
நாட்டில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையொன்று அவசியம். இதன்போதுதான், பிரச்சினை தீரும்.
முஸ்லிம் விவகார அமைச்சு செய்ய வேண்டிய கடமைகளை இராணுவமும், பொலிஸும் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த அமைச்சை மாற்ற வேண்டியுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.