முஸ்லிம் கிராமங்களில் வெடித்த கலவரம்; திணறும் இராணுவம்!
13 May,2019
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, மடிகே மற்றும் அனுக்கான உள்ளிட்ட கிராமங்களிலேயே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்றைய தினம் சிலாபத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையால் நேற்றிரவு குளியாப்பிட்டியவிலுள்ள பள்ளிவாசல்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டபோதும் இன்றையதினமும் பல முஸ்லிம் கிராமங்களில் அசாதாரண சூழ்னிலைகள் உருவாகி வீடுகள் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டுள்ளன.
இதனையடுத்து வடமேல் மாகாணம் முழுவதும் அவசர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிரமாக போராடிவருகின்றனர்.