நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள்! சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்!
13 May,2019
சிறிலங்காவில் குளியாப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய ஆகிய காவல்துறை பிரிவுகளிலேயே இன்று அதிகாலை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள் மீது நேற்று மாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, இந்தப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி, நேற்றிரவு பெருமளவிலானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்தே, இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து. காவல் நிலையத்துக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.