தப்பி ஓடவில்லை; பதறும் ரிஷாட்!
11 May,2019
பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கும் சபாநாயகர் உடனடியாகத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அவ்வாறு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டால் யார் உண்மை கூறுகின்றனர், யார் பொய் கூறுகின்றனர் என்பதை கண்டறியு முடியும்.
உத்தியோகபூர்வமாக நான் ஒமானுக்குச் சென்றிருந்தேன். எனினும் நான் நாட்டைவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
அரசியலுக்கு வந்த நாளில் இருந்து எனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை நான் பகிரங்கப்படுத்தியுள்ளேன்.
என்மீது விரலை நீட்டி நிலைமைகளை திசைதிருப்பி அடிப்படைவாதிகளையும், பயங்கரவாதிகளையும் பாதுகாப்பதற்கே பலர் முயற்சிக்கின்றனர்.
இஸ்லாம் மதத்தில் பயங்கரவாதத்துக்கோ அடிப்படைவாதத்துக்கோ அனுமதி வழங்கப்படவில்லை.
இஸ்லாத்தின் பெயரை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்த பயங்கரவாதத் தாக்குதலினால் நாட்டில் உள்ள 22 இலட்சம் முஸ்லிம்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பள்ளிவாசல்களில் வாள்கள் மற்றும் கத்திகள் மீட்கப்படுவதாக ஊடகங்களில் காண்பிக்கின்றனர்.
திகனவில் 30 பள்ளிவாசல்கள் அடித்து நொருக்கப்பட்டபோது பள்ளிவாசல்களில் ஆயுதங்களை எடுத்து யாராவது தாக்குதல்களை நடத்தினார்களா?
பத்துப்பேர் செய்த பாவத்தை 22 இலட்சம் பேர் மீது திணிக்காதீர்கள். நாம் ஏதோ குண்டைக் கொண்டுவந்து வைத்தது போல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
ஊடகங்கள் வேண்டும் என்றே என்மீது சேறுபூசும் வகையில் செயற்படுகின்றன. ஊடக நெறி தவறி செயற்படுகின்றார்கள்.
சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களை நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறுகின்றனர். இது எமது நாடு, நாம் ஏன் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.