குண்டு வைத்தவர்களுக்கு பிணை வழங்கிய ஸ்ரீலங்கா அரசு; களத்தில் இறங்கிய SIU!
11 May,2019
குண்டு தயாரிக்கப்பட்ட நிறுவனம் என சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்பு நிறுவனத்தில் சேவையாற்றிய 9 பேருக்கு பிணை கிடைத்த விவகாரம் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது.
இது தொடர்பில் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உள்ளிட்ட மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணை செய்துள்ளது.
சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு நிறுவனத்தில் குண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், இதன்போது சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர்களுக்க பிணை வழங்கியதால் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்தே ஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் உதய ஹேமந்த, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் விதுர ஜயசிங்க, வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியல் குணதிலக ஆகியோரிடமே எஸ். ஐ.யூ. இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொருவரிடமும் தலா 8 மணி நேரங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெவன் டி சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன