பயங்கரவாதிகளுடன் தொடர்பு; இலங்கையின் முக்கியஸ்தர் கைது!
08 May,2019
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளர் எனவும் அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இருந்து அவருக்கு சொந்தமான கடிதங்கள் மற்றும் கணினி என்பவற்றை விசாரணைகளுக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த அதிகாரி தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவருக்கு எதிரான கல்வி அமைச்சின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் இலங்கை புலனாய்வாளர்களுடன் இணைந்து சர்வதேச புலனாய்வாளர்களும் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் போது பாணாந்துறையில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இவர் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் என கூறப்படும் இரத்தினக்கல் வர்த்தகரான கோடீஸ்வரர். இவர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சொந்தமான பாணந்துறையில் அமைந்துள்ள இரண்டு மாடி சொகுசு வீடொன்றில் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் வீட்டில் இருந்து 591 ரைபில் ரவைகள், சொகுசு ஜீப் வண்டி, இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள், வெளிநாட்டு நாணயத்தாள்கள், தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு வழங்கிய பணம் தொடர்பான பற்றுச்சீட்டுக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.