இலங்கை தாக்குதலுக்கு வெடிகுண்டுகளை எடுத்து வந்த வேன் சிக்கியது : 3 பேர் கைது
01 May,2019
ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கடந்த 21–ந்தேதி உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடிய வேளையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் உலகை உலுக்கின. கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 253 பேர் கொல்லப்பட்டிருப்பது ஈர இதயங்களை நொறுங்கச்செய்தது.
இந்த தொடர் குண்டுவெடிப்புகளில், சீனர்கள் 4 பேர், டென்மார்க் நாட்டினர் 3 பேர், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என வெளிநாட்டினர் மொத்தம் 42 பேர் பலியாகி இருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. வெளிநாட்டினர் 12 பேரை காணவில்லை.
கொழும்பு நகரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களான சின்னமன் கிராண்ட், தி ஷாங்கிரி லா, தி கிங்க்ஸ்பரி ஆகியவை தொடர் குண்டுவெடிப்புகளில் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.
குண்டுவெடிப்புகளால் ஓட்டல் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவை ஓட்டல் அதிபர்கள் நேற்றுமுன்தினம் சந்தித்து பேசினர். அப்போது பயங்கரவாத தாக்குதலால் நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டுள்ளதை அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டுள்ள ஓட்டல்களுக்கு அதிகபட்ச நிதி உதவி வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையொட்டி இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் இந்திரஜித் குமாரசாமிக்கு தேவையான அறிவுறுத்தலை அதிபர் சிறிசேனா வழங்கினார். அதில், பாதிக்கப்பட்ட ஓட்டல்களுக்கு அதிகபட்ச நிதி உதவியை உடனடியாக வழங்குமாறு கூறி உள்ளார்.
இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது நாங்கள் தான் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இருப்பினும், இலங்கை அரசு, உள்நாட்டில் இயங்கி வருகிற தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மீது குற்றம்சாட்டி வருகிறது.
இந்த குண்டுவெடிப்புகளில் தமிழ்வழிக் கல்வி ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கூட முதல்வர் ஒருவர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நாசவேலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஒரு கண்டெய்னர் லாரியிலும், வேனிலும்தான் கொண்டு வரப்பட்டதாக தெரிய வந்தது.
அதன் பேரில் இலங்கையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து, அவை உஷார்படுத்தப்பட்டன. இதையொட்டி கொழும்பு துறைமுக பாதுகாப்பு இயக்குனர் விடுத்த எச்சரிக்கை குறிப்பு ஒன்றில், அடையாளம் தெரியாத ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு வேன் மூலம் வெடிகுண்டுகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெடிகுண்டுகள் ஏற்றி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிற அந்த வேன், பொலனறுவை நகரில் சுங்கவிளை என்ற இடத்தில் சிக்கியது. அந்த வேனின் பதிவு எண். ‘இபி பிஎக்ஸ் 2399’ ஆகும்.
அந்த வேனுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரூவன் குணசேகரா நேற்று கொழும்பு நகரில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குண்டுவெடிப்புகள் குறித்த தவறான தகவல்கள் பரவி, பொதுமக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிற வாய்ப்பு இருந்ததால் சமூக ஊடகங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்து இருந்தது.
அந்த தடையை இலங்கை அரசு நேற்று விலக்கிக்கொண்டு விட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அதிபர் சிறிசேனாவின் தகவல் துறை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு பிறப்பித்தது.
இதையடுத்து இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ் அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.