ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலக வேண்டும் ; அனுரகுமார
29 Apr,2019
மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்க சட்டத்தை கையில் எடுக்கும்போது சட்டப்புத்தகத்தை புரட்டிப்பார்க்காத பிரதமர் சர்வதேச பயங்கரவாத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுக்கையில் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறுவது மிகவும் மோசமான செயற்பாடாகும்.
தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்திய ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவிவிலக வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. சர்வதேச பயங்கரவாதிகளை தண்டிக்க இலங்கையில் சட்டம் இல்லையென்றால் அதனை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்ட இலங்கை முஸ்லிம்கள் இருப்பார்கள் என்றால் அவர்களை அடையலாம் காண வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இவற்றை இல்லாதொழிக்க பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டியது அரசாங்கதின் கடமையாகும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு இலங்கையில் மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டு நடத்தும் ஆர்ப்பாட்டங்களை அடக்க தொழிலாளர் போராட்டங்களை அடைக்க ஒருபோதும் சட்டப்புதகத்தை புரட்டிப்பார்க்க மாட்டார்.
ஆனால் இவ்வாறு சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கையில் மாத்திரம் இவர்களுக்கு சட்டம் தடையாக இருக்கும். இவர்கள் அனைவும் உடனடியாக தமது பதவியை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.