இலங்கை கல்முனை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 15 பேரின் சடலங்கள் மீட்பு
27 Apr,2019
ஈஸ்டர் பண்டிகையான கடந்த 21-ந் தேதி, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தொடர் சோதனைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், கல்முனை - சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இரவு ஒரு விட்டில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற வீட்டில் இருந்து இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையதெனவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண் ஒருவரும் சிறார் ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லையென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.