இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நேற்று மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் இருந்து 40 கி.மீ. தொலைவில் புகோடா என்ற நகரம் உள்ளது. அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு பின்னால் உள்ள காலி நிலத்தில் குண்டு வெடித்தது. நல்லவேளையாக, அப்போது அங்கு யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த குண்டுவெடிப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் 16 பேர் கைது
இதற்கிடையே, அவசர நிலையை பயன்படுத்தி, சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை நடந்த வேட்டையில், மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு பயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. இத்துடன் சேர்த்து கைதானவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கையெறி குண்டுகளுடன் 3 பேர் கைது
நேற்று தலைநகர் கொழும்பில் மாத்தரை பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையின்போது, 3 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் 21 நாட்டு கையெறி குண்டுகளும், 6 கத்திகளும் வைத்திருந்தனர். அவற்றையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நுவரேலியாவில், 200 டெட்டனேட்டர்கள் சிக்கின.
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலைக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஓட்டெடுப்பு எதுவும் இல்லாமலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆளில்லா குட்டி விமானத்துக்கு தடை
தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இலங்கையின் வான்பகுதியில் ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. வான்வழித் தாக்குதலை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 6 ஆயிரத்து 300 முப்படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தகவலை ராணுவ செய்தித்தொடர்பாளர் சுமித் அட்டபட்டு கூறினார்.
நிலைமை சீரடையும்வரை, தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கத்தோலிக்க சபை தலைவர் ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிகாரியை நீக்க முடியாது
உளவு தகவல் அடிப்படையில், தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தலைமை போலீஸ் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா வலியுறுத்தினார்.
தலைமை போலீஸ் அதிகாரி பதவி, அரசியல் சட்ட கவுன்சிலால் முடிவு செய்யப்படும் சுயேச்சையான பதவி. எனவே, அவராக பதவி விலகாவிட்டாலோ அல்லது நாடாளுமன்றம் மூலம் நீக்காவிட்டாலோ அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று இலங்கை வட்டாரங்கள் தெரிவித்தன.
தவறுக்கு ஒப்புதல்
இதற்கிடையே, உளவுத்துறை மாபெரும் தோல்வி அடைந்திருப்பதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ராணுவ துணை மந்திரி ருவன் விஜேவர்த்தனே கூறுகையில், “தாக்குதல் நடக்கப்போவதை கடந்த 4-ந் தேதியே இந்திய உளவு அமைப்பு தெரிவித்தது. இந்த தகவல், சரியான நபர்களிடம் பகிரப்பட்டு இருந்தால், இந்த குண்டுவெடிப்பை தவிர்த்து இருக்கலாம் அல்லது தாக்குதலின் வீரியத்தை குறைத்து இருக்கலாம். எனவே, இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.