இறைச்சிக் கழிவு குழியை சுத்திகரிக்கச் சென்ற நால்வர் பலி
25 Apr,2019
வவுனியா நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரித்துக்கொண்டிருந்த நகரசபையின் சுகாதார தொழிலாளிகள் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தினை நேரில் பார்த்தவர் கருத்து தெரிவிக்கையில்,
இன்று மதியம் 1 மணியளவில் மாடு வெட்டப்பட்ட இரத்தம் மற்றும் நீர் ஆகிய கழிவுப்பொருட்கள் விடப்படும் குழியை சுத்திகரிப்பதற்கு குழியினுள் நால்வர் இறங்கி நீரைப்பாச்சி அடித்தார்கள்.
இதன்போது ஒருவர் திடீரென மயக்கமுற்று குழியில் வீழ்ந்துள்ளார். இதனால் மற்றையவர் அவரை காப்பாற்ற முயன்றபோது ஏனைய இருவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முற்பட்டனர். அவர்களும் மயக்குமுற்று கழிவுக்குள் விழ காப்பாற்றிக்கொண்டிருந்தவரும் மயக்கமுற்று வீழ்ந்தார்.
இதன் காரணமாக கழிவு பொருட்கள் அடங்கிய குழியில் வீழ்ந்தவர்களை உடனடியாக யாராலும் காப்பாற்ற முடியாத நிலையில் அங்கு கடமையில் இருந்து காவலாளியும், வாகனத்தின் சாரதியுமாக மூவர் அவர்களை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
முயற்சி பலனளிக்காமையால் கூக்குரல் இட்டு நகரசபையின் பொறுப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதுடன் அம்புலன்ஸ் சேவைக்கும் அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சகாயமாதாபுரத்தினை சேர்ந்த செல்வராசா, வசந்தகுமார், ஜி.சசிக்குமார் , பூந்தோட்டத்தை சேர்ந்த சந்தனசாமி என்ற நகரசபை சுகாதார தொழிலாளிகளான குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இக்குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்