அமெரிக்க குடியுரிமையை துறக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி – என்கிறார் கோத்தா
13 Apr,2019
தமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரே அவர் இவ்வாறு கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோத்தாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர்.
அதையடுத்து, விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அறையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு மதத் தலைவர்களின் ஆசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
“அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.
இந்த வழக்குகள், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்கு சார்பான சில ஊடகங்களினால் சோடிக்கப்பட்ட பொய்.
அமெரிக்காவில் இருந்த போது, எத்தகைய நீதிமன்ற ஆவணங்களும் கையளிக்கப்படவில்லை.
அமெரிக்கா எனக்கு எதிராக அவ்வாறு செயற்படாது” என்றும் தெரிவித்தார்.