கடன் காரணமாக வடக்கில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் பெண்கள்
07 Apr,2019
ராஜபக் ஷ காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நுண்கடன் திட் டத்தினாலேயே அதிகமான மக்கள் கடன் சுமைக்கு ஆளாகியிருக்கின்றனர். என்றாலும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வந்த 45 ஆயிரம் பெண்களை நுண்கடன் சுமையில் இருந்து நீக்கினோம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நிலையியற்கட்டளை 27/2ன் கீழ் நேற்று முன்தினம் பாராளுமன்றத் தில் நுண்கடன் அதிகரிக்கப்படுவது தொடர்பாக கேட்ட கேள்விக்கு நேற்று பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நுண்கடன் திட்டம் 2004ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. சுனாமி பேரழிவுக்கு பின்னர் எமது நாட்டுக்கு பல நாடுகளில் இருந்தும் 13 பில்லியன் டொலர்கள்வரை நன்கொடையாக வந்து சேர்ந்தன. என்றாலும் அந்த நன்கொடைகளை அதிகமானவர்கள் தங்களின் சொந்த கணக்குகளுக்கு திருப்பிக்கொண்டனர். இந்த சுனாமி நிதியே நுண்கடன் பிரச்சினைக்கு பிரதான காரணம் என மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
சுனாமிக்கு பின்னர் தேசிய அபிவிருத்தி நிதியம் என அமைத்துக்கொண்டு நுண்கடன் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதுதொடர்பில் நாங்களும் தேடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போன்று இன்று சாதாரண மக்களின் கடன் தொடர்பில் கேட்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்தில் 34ஆயிரம் பேர் தங்கள் ஆபரணங்களை அடகுவைத்து, அதனை மீட்டிக்கொள்ள முடியாமல் இருந்தனர். அதனை மீட்டிக்கொள்ளும் நோக்கில் நாங்கள் 94 மில்லியன் ரூபாவை சலுகையாக வழங்கியிருக்கின்றோம். 2015க்கு முன்னர் பெற்றுக்கொண்ட கடன்களினாலே மக்கள் இவ்வாறு அதனை திருப்பி செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறுநாள் வேலைத்திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட கடன்களில் இருந்து 50 வீதத்தை நீக்க நடவடிக்கை எடுத்திருந்தோம். அவர்களில் அதிகமானவர்கள் அம்பந்தோட்டை மாவட்ட விவசாயிகளாவர். அதேபோன்று நான் நிதி அமைச்சராக இருந்து, கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு உட்பட்ட 12 மாவட்டங்களைச்சேர்ந்த 45ஆயிரம் பெண்களின் நுண்கடன்களை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பூரணமாக இல்லாமலாக்கினேன்.
நுண்கடன் வழங்கும்போது 35 வீதத்துக்கு அதிக வட்டி பெறமுடியாது என்ற வரையறையொன்றை நாங்கள் ஏற்படுத்தினோம். சில பெண்கள் நூற்றுக்கு 200வீத வட்டிக்கு கடன் பெற்றிருந்தனர். அதனை செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொண்டும் இருந்தனர். குறிப்பாக வடக்கில் அதிகமான இளம் விதவைப்பெண்கள் இதனால் பாலியல் துண்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர். தற்போதும் ஆளாகி வருவதாக கேள்விப்படுகின்றோம்.
இந்த நுண்கடன் திட்டம் ராஜபக்ஷ் அரசாங்க காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. அதனை சம்பூர்ணமாக ஏற்படுத்தியது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன். இந்த நுண்கடன் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடந்த அரசாங்கத்துடன் தொடர்புபட்டவர்களாகும். அதேபோன்று நுண்கடன் நிறுவனம் கடந்த அரசாங்கத்தில் கறுப்பு பணத்தை சுத்திகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும். இதுதொடர்பான சம்பூர்ண அறிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன். நுண்கடன் முறையை சிறந்த முறையில் கொண்டுசெல்ல கடன் ஒழுங்குபடுத்தல் சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதனை விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளோம் என்றார்.