அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் ஆலை – 14 பில்லியன் டொலர் முதலீடு
04 Apr,2019
அம்பாந்தோட்டையில் மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சிங்கப்பூரின் Sugih Energy International நிறுவனம் 14 பில்லியன் டொலரை முதலீடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“ஏனைய சிங்கப்பூர் நிறுவனங்களால் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை விட இந்த முதலீடு மிகப்பெரியது.
முதலாவது சிங்கப்பூர் நிறுவனம் அமைக்கவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நாளொன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. ஆனால் இரண்டாவது நிறுவனத்தின் ஆலை, நாளொன்றுக்கு 420,000 பீப்பாய்களை உற்பத்தி செய்யக் கூடியது.
இரண்டாவது சிங்கப்பூர் முதலீட்டாளர் இரண்டாவது கட்டமாக பெற்றோலிய இரசாயனம் மற்றும் துணை உற்பத்திகளை மேற்கொள்ளும் வகையில் தமது முதலீட்டை, 24 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கிறார்.
புதிய நிறுவனத்தின் முதலீட்டுக்காக அம்பாந்தோட்டையில் 600 ஏக்கர் நிலர் வழங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.