பிரித்தானியாவுக்கு அருகதை இல்லை!
28 Mar,2019
ஊவா வெல்லஸ்ஸ போராளிகளை, இளைஞர், யுவதிகள், குழந்தைகளைக் கொன்று, ஊவா வெல்லஸ்ஸவை இரத்தத்தால் நீராடிய பிரித்தானியாவுக்கு, இலங்கையின் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர்வன்ச.
நாடாளுமன்றத்தில், நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இலங்கையிலுள்ள சொத்துகளை, புராதானப் பொருள்கள், இடங்களை கொள்ளையடித்துச் சென்ற பிரித்தானியா, இன்று மனித உரிமைகள் தொடர்பில் எமக்குப் பாடம் கற்பிக்க வருகின்றது.
திலக் மாரப்பன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தாலும், சந்திரிகாவின் கையாளான மனோ தித்தவெல்லதான் இலங்கை தொடர்பில் ஜெனீவா விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென ஆலோசனை கூறுகின்றார். மனோ தித்தவெல்ல, மோசடியான முறையில் சம்பாதித்து உண்டு கொண்டு, இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பவர். அவருக்கு, இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து தீர்மானிக்க முடியுமா?
மனோ தித்தவெல்ல என்ற வியாபாரிக்கு பணம் கிடைக்குமாயின் எந்தவொரு குப்பை வேலையும் செய்வார். எனவே, இவ்வாறானவர்களை இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகள் விடயத்தில் தீர்மானங்களை எடுக்க விட வேண்டாம்.
இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை அரசைப் பாதுகாக்கும் கொள்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அரசை பழிவாங்கும், இராணவத்தினரைப் பழிவாங்கும், வெளிநாட்டுக் கொள்கையை வைத்துக்கொண்டு, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியாது.
எந்தவோர் அரசும் தமது அரசைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். அந்த அரசில் ஏதாவது பிரச்சினை எற்படுமாயின் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு அரசியல் நடவடிக்கை அல்லது பாதுகாப்புத் தரப்பினரைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை முடிவடைந்தவுடன் உலகில் பலம் பொருந்திய அரசுகள் குறித்த நாட்டுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்ளும் போதும் இதிலிருந்து பாதுகாக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். அரசாங்கம் மாறினாலும் அரசு மாறாது.
பாதுகாப்புத் தரப்பினர் என்று கூறப்படுபவர்கள் அரசின் பாதுகாப்புத் தரப்பு என்றே கூறப்படும். இதனை அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினர் என்று கூறமாட்டோம் . பாதுகாப்புத் தரப்பினர், அரசு பிரிவதை தடுப்பதற்காக, அரசுக்காகவே செயற்பட்டனரே தவிர, அப்போதைய அரசாங்கத்துக்காக செயற்படவில்லை. ஆனால், ஜெனீவாவின் இன்றைய யோசனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை ஊடாக எமது இராணுவத்தினர் இலங்கை அரசின் இராணுவம் அல்ல அப்போதைய மஹிந்த அரசாங்கத்தின் இராணுவமாக வெளிக்காட்டியுள்ளனர்.
“எம்மைப் பழிவாங்குவதையும், ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கடற்படைத் தளபதி கரன்னாகொடவையும், புலனாய்வுப் பிரிவினரையும், பழிவாங்கும் போது எப்படி புரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த விமல் வீரவன்ச, இந்த அரசாங்கம் அரச எதிர்ப்பு அரசாங்கம் என்றார். தமது அரசுக்கு எதிராகவே செயற்படும் அரசாங்கம் தான் இந்த அரசாங்கம்.
அரசுக்கு எதிராகச் செயற்படும் சக்திகளுடன் கைகோர்க்கும் அரசாங்கம் என்றார். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை அமைக்க அரசமைப்பில் இடமில்லையெனத் தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி, ஆனால், பிரித்தானியா கொண்டு வரும் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தை அமைக்க இலங்கை இணை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இதன்மூலம், யுத்தக்குற்றம் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டு, பாதுகாப்புத் தரப்பினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொண்டு, அதற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளமை அரசாங்கத்துக்கான எச்சரிக்கை, அரசைக் காட்டிக்கொடுக்கும் செயற்பாடு என்றார்.