ஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது : பிரதமர்
23 Mar,2019
ஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால் முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் இலங்கை இராணுவத்தினரை ஜெனீவாவுக்கு அனுப்புவதற்கு தயாரில்லை. அதேவேளை, இராணுவ வீரர்கள் தற்போது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
டி.எஸ்.சேனாநாயக்காவின் 67வது நினைவு தின நிகழ்வு நேற்று கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் கொள்கைவழியில்தான் நாம் பயணிக்கின்றோம் என்பது நேற்று கூட உறுதிப்படுத்தப்பட்டது. என்றும் கூறினார்.
2009ம் அண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிந்தோ, தெரியாமலோ ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளருடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டார். இதன் போது ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு பொறுப்புக்கூறல் அதேபோல் மனித நேய செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தார்.
அப்போதிருந்த அரசாங்கம் சர்வதேச இராணுவ நீதிமன்றத்திற்கு இணங்கியது. எனினும் அதற்குப் பின்னரே அது குறித்து கடந்த அரசாங்கத்திற்கு அச்சம் ஏற்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைத்ததன் பின்னர், ஜனநாயகம், சட்ட நடைமுறையில் நம்பிக்கை ஏற்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரோ, எல்ரிரிஈ அமைப்போ சட்டத்தை மீறி செயற்பட்டிருக்குமாயின் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும். இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது.
நாட்டின் இறைமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது. எமது முறை தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டதால் சகல பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடிந்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.