இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் - அதிர்ச்சியில் மக்கள்
19 Mar,2019
இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது உடலில் காயங்களையும் காட்டியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பதிவாகியுள்ள பல முறைபாடுகள் குறித்து போலிஸார் விசாரணைகளை நடத்திய போதிலும், சம்பவம் தொடர்பில் எந்தவித ஆதாரங்களையும் போலிஸாரினால் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
மாத்தறை - தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாத்தறை போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக போலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இவ்வாறு கூறப்படுகின்ற சம்பவத்தை தொடர்ந்து பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த போலிஸார், இன்றைய தினம் பிரதேசத்தில் சோதனைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் உள்ளதா?
இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்னவை தொடர்புக் கொண்டு வினவினோம்.
இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து வெளியான செய்திகள் தொடர்பில் தாம் விடயங்களை ஆராய்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், நாட்டிற்குள் அவ்வாறு எந்தவொரு குள்ள மனிதரின் நடமாட்டங்கள் தொடர்பிலும் தமக்கு உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
வேற்று கிரகவாசிகள் இலங்கைக்குள் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற கருத்தையும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன நிராகரித்தார்.
ஊடக பிரபல்யத்தை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் சில தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், குள்ள மனிதர்களின் நடமாட்டம் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்ற கருத்தில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.