படையினருக்கும் புலிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கும் யோசனை : அமைச்சர் ரணவக்க
27 Feb,2019
போர்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
போர்குற்றச்சாட்டு தொடர்பில் படையினரை மட்டும் குற்றம் சாட்டுவது பொருத்தமானது அல்ல என்றும் பல தரப்பினரும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஆங்கில செய்தித் தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என்றால் புனர்வாழ்வு அளிக்கப்பட 12,000 முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவ்வாறு செய்வது முடிவற்ற ஒரு தொடர் கதையாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன் அதனால் எல்லோருக்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்குவது சிறந்தது என்றும் ரணவக்க தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு சட்ட தேவைகளுக்காக காணாமல் போனவர்கள் தொடர்பில் ” காணாமல் போன ” சான்றிதழ் வழங்கபபடவேண்டும் என்று தனது யோசனையில் இருப்பதாகவும் போரில் கொல்லப்பட்டவர்களின் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கபபடவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ நோக்கங்களுக்காக பலவந்தமாக எடுக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் உரியவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் அல்லது உரிய நடைமுறைகளை பின்பற்றி நஷ்ட ஈடு வழங்கப்பட்டு அரசாங்கம் அவற்றை கைவசபப்டுத்த எவ்ண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழர் விடுதலைக்கூட்டணி 1976 ஆம் ஆண்டு தனி நாடு கோரி வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நிறைவேற்றியதாகவும் பின்னர் ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் எழுச்சி பெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், விடுதலைப்புலிகள் மோசமான யுத்த குற்றங்களை இழைத்து 9000 பேர் வரை கொலை செய்துள்ளதாகவும் கூறினார். இந்த பின்னணியில் இலங்கை மீது சர்வதேச கண்காணிப்பு இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
“2015 ஆம் ஆண்டு நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்றை கூட்டாக கொண்டுவந்தோம். இதனை நாம் செய்திருக்கக்கூடாது.
இன்று அமேரிக்கா மனித உரிமைகள் சபையில் இல்லை. பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகியவை இம்முறை ஒரு தீர்மானத்தினை கொண்டுவரும்.
இந்தன் பிரச்சினையை நாம் தொடர்ந்தும் சர்வதேச கண்கானிப்பின் கீழ் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. பதிலாக, கடந்த காலத்தில் என்ன செய்தோம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வினை கொண்டுவரவேண்டும்.
எம்மை பொறுத்தவரையில் நாங்கள் நன்றாகவே நடந்திருக்கிறோம். தமது பகுதிகளில் மக்கள் தம்மை தாமே ஆளும் வகையில் ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்தி இருக்கிறோம்.
இது நாம் பெற்ற வெற்றி. எந்த அரசியல் படுகொலையும் நடக்கவில்லை. வெறுப்பு அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை.
அமிர்தலிங்கத்தையும் யோகேஸ்வரனையும் கொலை செய்தது இராணுவமோ அல்லது சிங்கள தீவிரவாதமோ அல்ல. இது விடுதலைப்புலிகளே இதற்கு பொறுப்பு. சந்தர்ப்பம் கிடைத்து இருந்தால் சம்பந்தனையும் புலிகள் கொன்று இருப்பர் ” என்று அவர் மேலும் கூறினார்.