நாட்டில் ஜனநாயகத்திற்கு அண்மைக்காலமாக பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் உருவெடுத்திருந்த பிரபாகரன் நாட்டின் சட்டங்களுக்கு உட்படவில்லை.
அவர் தனக்கு தேவையானதை தனது விருப்பத்திற்கேற்ப செய்து கொண்டார். அதுபோன்று தெற்கில் உருவாகியுள்ள சிங்கள பிரபாகரனுடன் பணியாற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை.
நாட்டின் சட்டத்தினை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம்பலகாமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
2015ஆம் ஆண்டு நாட்டின் இருண்ட ராஜபக்ஷ யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் புதிய ஆட்சியை பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து உருவாக்கியிருந்தோம்.
19ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொண்டு இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் வகையிலான சம்பிரதாயங்களை ஏற்படுத்தியிருந்தோம்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்;க வேண்டும் என்பதற்காக நாம் அதனை கொண்டுவரவில்லை. மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனப் பல்வேறு கட்சிகளும் இணைந்தே அந்தச் சட்டத்தினை அமுலாக்குவதற்காக பணியாற்றியிருந்தோம்.
மிக முக்கியமாக, 19ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்கியதன் மூலம் 11 ஆணைக்குழுக்களை ஸ்தாபித்திருந்தோம். அண்மைக்காலமாக நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக அரசியலமைப்பு பேரவையானது கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. அதன் செயற்பாடுகள் தொடர்பில் தவறான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இது மிகத்தவறானதாகும்.
அரசியலமைப்பு பேரவையானது இந்த நாட்டின் அதியுயர் பதவிகளுக்கான நியமனங்களை வழங்குவதில் பெரும்பணியாற்றுகின்றது.
இந்த பேரவையானது சுயாதீனமாகவும் நேர்த்தியாகவும் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறிருக்கையில் அதன் மீது தேவையற்ற வகையில் சேறுபூசுவதற்கு முயற்சிக்கின்றார்கள். இதன்மூலம் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தவே முனைகின்றார்கள்.
இந்நிலையில் தான் ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் ஒரு அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றது. அந்த அரசியல் சூழ்ச்சியையும் நாங்கள் வெற்றி கொண்டோம்.
நாங்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பதற்காக போராடியிருக்கவி;ல்லை. நாங்கள் உட்பட, சிறுபான்மைக் கட்சிகளும் ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்து போராடினார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள்.
19ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாட்டினை மீண்டும் ஏகாதிபத்தியவாதிகளிடத்தில் கையளிப்பதற்கு நாம் விரும்பவில்லை.
பாராளுமன்றத்தில் மிளகாய்த் தூள் வீசியவர்கள் தொடர்பாக அறிக்கையொன்றை பிரதி சபாநாயகர் கையளித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.
சிங்கள பௌத்தவாதிகள் என்று கொடி உயர்த்துபவர்கள் ஒருவிடயத்தினை நன்றாக புரிந்துகொள்ளவில்லை. பௌத்த தர்ம கோட்பாட்டில,; அமைதியாக கலந்துரையாடல்கள் மூலமாகவே செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
வடக்கில் பிரபாகரன் ஆயுதத்தினை தூக்கி போராடினார். அவர் இந்த நாட்டின் சட்டங்களை மதிக்கவில்லை. அவர் தனக்கு தேவையானவற்றை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்தார்.
அதுபோன்று தற்போது தெற்கில் உருவாகியுள்ள பிரபாகரனுடன் .இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை எமக்கு இல்லை.
அவரிடத்தில் நாட்டைக் கையளிக்க முடியாது. நாங்கள் நாட்டினை பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் ஜனநாயகத்தினை பாதுகாக்க வேண்டியுள்ளது.
அதற்காக நாம் அனைவரும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் பொது கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளோம் ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காக அதில் அனைவரும் பேதமின்றி கைகோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.