இராணுவத்தினருடன் போரிட்ட புலிகளை மன்னித்துவிட்டோம், தமிழர்கள்தான் இனி இறங்கிவரவேண்டும்
21 Feb,2019
படையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிக்கப்பட்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது. இவ்வாறு முன்னாள் வான்படைத் தளபதி எயார் சீப் மார்சல் ரொசான் குணதிலக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போர் முடிவடைந்தப் பின்னர், புலி உறுப்பினர்கள் மறுவாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடைய வேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.
போர்காலத்தில் எனது தம்பி, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர் – என்றார்.