இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் சிறீலங்கா திரும்ப வேண்டும் |
17 Feb,2019
“அவர்களைது சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த சகல உதவிகளையும் செய்வோம்”
இந்தியாவில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகள் சிறீலங்காவிற்குத் திரும்ப வேண்டும். அவர்கள் சிறீலங்காவின் பிரஜைகள், என இந்தியாவிற்கான சிறீலங்காவின் தூதுவர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமிழ் அகதிகளை நேரடியாகப் பார்த்து அவர்களது வாழும் சூழலை அவதானிக்கவென பெர்னாண்டோ அவர்கள் சென்னை சென்றிருந்தார். இதன் பின் அவர் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவர் இதைத் தெரிவித்தார்.
Srilankan Tamil Refugees in Tamilnadu
“அவர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். ஒரு பேரழிவிற்குப் பின்னர் மக்கள் தாம் விரும்பியதனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியாதெனினும் நாடு திரும்ப விரும்பும் அத்தனை பேருக்கும் எம்மால் இயன்ற உதவிகளை நாம் செய்து கொடுப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களுக்கு என்னென்ன உதவிகளைச் செய்வீர்கள் என்று கேட்டதற்கு “வீடு, நிலம், மீள் குடியேறத்துக்கான நிவாரணம் மற்றும் புனர் வாழ்வுக்கான வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகளை வழங்கத் தயாராகவிருக்கிறோம்” என்றார் அவர்.
கடந்த அக்டோபர் 2018 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புது டெல்லிக்குச் சென்ற போது தமிழ் அகதிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது 3815 தமிழ் அகதிகளை இந்திய அரசு பொறுப்பேற்பதற்கான உறுதிப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
“திரும்புபவர்களுக்கான தேவைகள் பற்றிய விடயத்தில் நடவடிக்கைகளை எடுப்பதுசிறீலங்கா அரசின் கடமை. ஆனால் திரும்ப விரும்பும் அகதிகள் பற்றிய தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறை எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களிலேயே மீகுடியேற்றவே நாம் விரும்புகிறோம். அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அதிகப்படுத்துவதற்கு நாம் முயற்சிக்கிறோம்” என்று கூறுகிறார் ஒஸ்ரின் பெர்னாண்டோ.