புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
12 Feb,2019
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைசர் ராஜித செனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதை கச்சிதமாக அலிசாகிர் செய்து முடித்ததாகவும் இதனாலேயே நாட்டில் போர் முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நாடு பிரிக்கப்பட முடியாதென பேசப்படும் போதெல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் பேசப்படும் என்றும் ராஜித அவருக்கு புகழாரம் சூட்டினார்.
சீன அரசின் 234 மில்லியன் ரூபா நிதியுதவியில் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் 3 மாடிகளை கொண்ட கட்டிட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“அலிசாஹிர் மௌலானா விடுதலைப் புலிகளை இரண்டாக பிளவுபடுத்தாவிட்டால் இன்று எம்மால் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. இதனால் எவர் எதை சொன்னாலும், எவர் எதை மறந்தாலும் இலங்கை வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்று பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவுகூரப்பட வேண்டும்.
இன்று நான் அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே வந்துள்ளேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது. இல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வர முடியாது. இந்தநிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல, முழு நாட்டுக்கும் பொருந்தும். அலிசாஹிர் மௌலானா இந்த விடயத்தை செய்யும்போது, என்னுடன் பேசினார். அப்போது நான் சொன்னேன், “இது நல்ல பெறுமதியான வேலைதான். ஆனால், அதன் பின்னர் நீங்கள் உயிரோடு வாழ முடியாது“ என. “செய்து முடித்து விட்டு வருகிறேன்“ என்றார். “வேண்டாம். இந்த பக்கம் வர வேண்டாம்“ என்றேன்.
பின்னர் அவர் அனைத்தையும் செய்து முடித்து விட்டு, நாடு கடந்து அமெரிக்கா சென்றார். அங்கு நாங்கள் அவரை சந்தித்தோம். அதன்பின்னர் அவர் எனது குடும்ப நண்பரானார். பின்னர் அவர் நாட்டுக்கு வந்து, உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து தற்போது இராஜாங்க அமைச்சராகியிருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகை செய்வார்“ என்றார்.