இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை: சிறிசேனா எதிர்ப்பு
05 Feb,2019
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.
ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.
சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.
இந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.
இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.
ராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.
தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.
இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.