திருகோணமலை துறைமுகத்தின் அதி நவீன ராடர் – புதிய வசதிகளுடன் தயாராகிறது
29 Jan,2019
திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
”திருகோணமலை பிரதேசத்தை ஒரு ஏற்றுமதி வாய்ப்புள்ள கேந்திரமாக சிறிலங்கா அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
எனவே, சரக்கு கப்பல்களைக் கையாளுவதற்கான மேலும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அதற்காக, இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் புதிய ராடர் கருவி பொருத்தப்படவுள்ளதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன.
இயற்கைத் துறைமுகமான திருகோணமலையை பொருளாதார வாய்ப்பாக பயன்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம், இரவில் இயங்கக் கூடிய வசதி செய்யப்படும்.
ஜப்பானின் அனைத்துலக கூட்டுத்தாபனத்தின் 1 பில்லியன் யென் உதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
காலி துறைமுகமும், இரவு நேரத்தில் செயற்படும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.