லசந்த கொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொலை – சகோதரர் லால்
20 Jan,2019
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவரின் சகோதரர் லால் விக்கிரமதுங்க நீதிக்கான தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்
லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில்; பொரளை கனத்தையில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் லசந்தவின் சகோதரர் லால் விக்கிரமதுங்கவின் செய்தியை அவரது மகள் வாசித்துள்ளார்
அந்தசெய்தியிலேயே லால் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஒரு தசாப்தகாலம் என்பது துயரமடைவதற்கான நீண்ட காலம்,கொலை குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கான நீண்டகாலம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது கவலைக்குரிய விடயமாகயிருந்தாலும் இதுவே யதார்த்தமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த நிச்சயமாக அர்த்தமற்ற விதத்தில் மரணிக்கவில்லை. அவர் உருவாக்கிய தளம் இலங்கை அரசியலில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று காணப்படும் சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஏனைய சுதந்திரமான ஆணைக்குழுக்கள் இதனை புலப்படுத்துகின்றன
காட்டுமிராண்டித்தனமான தேசத்தை நாகரீகசமூகமாக மாற்றுவதற்கு மனித நெறிமுறைகள் அனைத்தையும் மீறியவர்களை நீதியின் முன் நிறுத்தும் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களின் உறுதிப்பாடு மாத்திரமே ஒரேயொரு நடவடிக்கையாக அமைய முடியும் எனவும் லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவளை தனது கருத்தின் மீது உள்ள உறுதிகாரணமாக தனது உயிரை பறிகொடுத்தது லசந்த விக்கிரமதுங்க மாத்திரமில்லைஎன லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்
இலங்;கையின் இருள்சூழ்ந்த வரலாற்றின் போது லசந்தவுடன் வடக்கை சேர்ந்த பலர் பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
நாங்கள் இன்று அவர்களிற்காக துயருகின்றோம்,லசந்தவும் அதனையே வலியுறுத்தியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை மூடிமறைப்பதற்காக நால்வர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர் நான்கு அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆதாரங்களை சேதப்படுத்தியுள்ளனர் என்ற சந்தேகம் காணப்படுகின்றது இதுவே எங்கள் தேசத்தின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் என்பது நீதிமன்ற விசாரணைகள் இன்றி சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
லசந்த யார் என கேட்பதில் அர்த்தமில்லை,உலகிற்கு லசந்த யார் என்பது தெரியும்,அவரது எழுத்து அதனை நிருபித்துவிட்டது அவர் காலத்தை கடந்து வாழ்வார் என லால் விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.