அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? வெளியானது அதிரடித் தகவல்!
14 Jan,2019
சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக குமார் சங்கக்கார அனைத்து இன மக்களும் விரும்புகின்ற ஒரு விளையாட்டு வீரராக விளங்குவதால் இந்த வெற்றியினை உறுதிப்படுத்துக்கொள்ளமுடியும் என்பதுவே ஐக்கிய தேசிய முன்னணியின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்பொழுது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடிவரும் குமார் சங்கக்கார இந்த விடயம் குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.