மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்
11 Jan,2019
எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.
இதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.