முதலாவது நாடாளுமன்ற அமர்வு – எதிர்க்கட்சி தலைவர் பதவிதீர்மானம்!
08 Jan,2019
வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. இவ்வருடத்தின் முதலாவது அமர்வென்பதால், சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
இன்றைய தினம் பார்வையாளர்களின் கூடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதோடு, பாடசாலை மாணவர்கள், சபாநாயகரின் அழைப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மஹிந்தவே நீடிப்பாரென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்வரை சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பாரென கூட்டமைப்பு குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய அமர்வில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.