பலவந்தமாக எவராலும் அரசமைப்பை நிறைவேற்ற முடியாது- மகிந்த இறுமாப்பு!!
06 Jan,2019
நாட்டுக்குத் தேவைப்படுவது இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தும் அரசமைப்பு அல்ல. இனங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்தும் அரசமைப்பேயாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இன்று பல்வேறு யோசனைகள் கொண்டு வரப்படுகின்றன. நாட்டைப் பிளவுப்படுத்தும் அரசமைப்பை கொண்டு வருகின்றனர். இனங்களை நாசமாகும் அரசமைப்பை கொண்டு வருகின்றனர். பலவந்தமாக அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
அனைத்து இனங்களையும் ஒற்றுமைப்படுத்தும் அரசமைப்புக்குப் பதிலாக இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் அரசமைப்பு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறான அரசமைப்பில் அரசியல் தீர்வை எட்ட முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை பிளவுப்படுத்த முற்பட்ட போதும் பெரும் இழப்புகளுடன் நாட்டை நாங்கள் காப்பாற்றிக் கொண்டோம். ஆனால், இன்று அதனை அரசமைப்பின் மூலம் சாதிக்கப் பார்க்கின்றனர். அவர்களின் எண்ணங்கள் முட்டாள் தனமானது. அவ்வாறான செயற்பாட்டுக்கு நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம் என்றார்.