ஏக்கிய ராஜ்ஜய என்பது ஒருமித்த நாடு அல்ல; ஒற்றையாட்சியே: சுமந்திரனிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்த ஐ.தே
02 Jan,2019
புதிய அரசியலமைப்பு வரைவில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும்.
அதில் எந்த மாற்றத்தையும் செய்ய அனுமதிக்க மாட்டோம். ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லுக்கு தமிழில் ஒருமித்த நாடு என்ற சொல்லை இணைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுதான்.
ஆனால் நாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒற்றை ஆட்சி என்ற சொல்லே புதிய அரசியலமைப்பிலும் இருக்கும்“
இவ்வாறு தெரிவித்து எம்.ஏ.சுமந்திரனின் நீண்டநாள் முயற்சிகளை ஒரேயடியாக உடைத்துள்ளது ஐ.தே.க. அந்த கட்சியின் முக்கியஸ்தரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று இதனை தெரிவித்தார்.
சில தினங்களின் முன்னர் கண்டிக்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார். பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது, தற்போது அரசியலமைப்பில் உள்ளதை போல ஒற்றையாட்சியே தொடர்ந்து பேணப்படும் என்றார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் எம்.ஏ.சுமந்திரனின் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுமந்திரன்-
“அவர் தமிழிலா ஒற்றையாட்சியென சொன்னார். ஏக்கிய ராஜ்ஜிய என்றுதானெ சொன்னார். ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என புதிய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அது ஒற்றையாட்சியல்ல. நான் நூறு முறை இதை சொன்னாலும், ஊடகங்கள் வேண்டுமென்றே ஒற்றையாட்சியென்றுதான் எழுதுகின்றன“ என சாடியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டார். அவரிடம் சுமந்திரனின் கருத்து தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்- “புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அது முடிந்ததும் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தற்போதைய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. புதிய அரசியலமைப்பிலும் 9 சரத்து மாற்றமின்றி தொடருமென்பதை உறுதியாக கூறுகிறோம்.
அதேபோல ஏக்கிய என்ற சொல்லிலும் எந்த மாற்றமும் நடக்காது. தமிழில் ஒருமித்த நாடு என்ற வியாக்கியானத்தை இணைக்கும்படி தமிழ்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எனினும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மும்மொழிகளிலும் ஏக்கிய என்ற சொல்லே இடம்பெறும்“ என்றார்.
வெளியான இடைக்கால அறிக்கையில், ஏக்கிய ராஜ்ஜியவிற்கு ஒருமித்த நாடு என்ற வியாக்கியானம் இடம்பெற்றுள்ளதே என கேட்கப்பட்டபோது, “வெளியானது இடைக்கால அறிக்கைதானே. அது இறுதி அரசியலமைப்பு இல்லையே“ என்றார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் ஐ.தே.க சார்பில் லக்ஷ்மன் கிரியெல்லவே அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.