சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய சந்திரிகாவுக்குத் தடை
01 Jan,2019
சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவே இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தாய்லாந்துக்கு ஒரு வார காலப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சுதந்திரக் கட்சித் தலைமையகத்தை, மூடி வைக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
தாய்லாந்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன நேற்று நாடு திரும்பிய நிலையில், இன்று சுதந்திரக் கட்சி தலைமையகம் மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும், சந்திரிகா குமாரதுங்கவையோ அவரது ஆதரவாளர்களையோ கட்சித் தலைமையகத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று, சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்துக்கு எதிராக சந்திரிகா குமாரதுங்கவும் அவரது ஆதரவாளர்களும், குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடப் போவதாக கடந்தவாரம் சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார். அதையடுத்து, சுதந்திரக் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.