மஹிந்த – கோட்டாவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்?
24 Dec,2018
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட போன்ற முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராகவும் வெளிநாட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சட்டத்தரணி சிவானி தியாகராஜா தலைமையிலான சட்டத்தரணிகளால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கடந்த ஆட்சியாளர்களை நிறுத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், இலங்கையில் தற்போது நீடித்துவரும் அரசியல் பிரச்சினைகளில் பிரதமர் ரணில் தலைமையிலான ஆளுந்தரப்பிற்கும், எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட மஹிந்த தரப்பிற்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நல்லாட்சியில் அமைச்சுப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில், யுத்தத்தை வழிநடத்திய முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.