பிழையான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் காசோலையை தயார் செய்யுங்கள் : பிரதமர்
22 Dec,2018
பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.‘கறுப்பு ஊடகங்கள்’ தொடர்பில் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி அவ்வாறான ஊடகங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த ‘கறுப்பு ஊடகங்கள்’ முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவது தொடர்பில் பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையில் யார் இருக்கின்றனர், யார் இல்லை என்பது தொடர்பான விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.
அமைச்சரவையில் யாரை நியமிப்பது, நியமிப்பதில்லையென்பது கலந்துரையாடி தீர்மானிக்கப்படுகிறது. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சில விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சர்களாக நியமிக்குமாறு கூறி அனுப்பிய பெயர்ப்பட்டியலில் இல்லாத சிலருடைய பெயர்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் விஜிதமுனி சொய்சாவின் பெயரை நான் அனுப்பவில்லை. அமைச்சரவைக்கான பெயர்கள் பிரதமர் செயலகத்தினாலேயே ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். இதுபோன்று பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்படாத நான்கைந்து பெயர் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சகல ஊடகங்களுக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்தால் பல மில்லியன் ரூபாய்களை நஷ்ட ஈடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சரவை நியமனம் தொடர்பில் என்னிடம் ஊடகங்கள் தொடர்புகொண்டு கேட்டனவா? நான் கூறும் கருத்தை அவர்கள் வெளியிடுவார்களா? தமது தவறான செய்தியைத் திருத்துவார்களா? கறுப்பு ஊடகங்கள் தொடர்பில் ஜனவரி மாதத்தில் விவாதமொன்றை நடத்தி அவ்வாறான ஊடகங்களின் சகல பெயர்களையும் பகிரங்கப்படுத்துவோம்.
அது மாத்திரமன்றி தவறான செய்திகளுடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக பல மில்லியன் ரூபாய்களை நஷ்ட ஈடாகக் கோரினால் அவற்றை செலுத்துவதற்கான காசோலைகளை ஊடக நிறுவனங்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.