சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதிக்கு வழங்கமாட்டோம்! – ஐ.தே.க.
19 Dec,2018
சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடக அமைச்சை, எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சென்றுள்ளது. இந்நிலையில், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அகில விராஜ் காரியவசம் மேற்குறித்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் ஊடக அமைச்சுப் பொறுப்புகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கினால் நாட்டில் அரசியலமைப்பு ரீதியாவும் அரசியல் ரீதியாகவும் மேலும் பல பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகுமென அவர் மேலும் கூறியுள்ளார்.
குறிப்பாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், தேசிய பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களையே ஜனாதிபதியால் வகிக்க முடியுமென அகிலவிராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஏனைய அமைச்சுக்களை வழங்கி பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க தயாரில்லையென அவர் மேலும் கூறியுள்ளார.