சம்பந்தனின் பதவி பறிபோனது – எதிர்க்கட்சி தலைவராக மகிந்த நியமனம்
18 Dec,2018
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மரபுகளுக்கு அமைய, அதிக ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் சற்று முன்னர் அறிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே, சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேவேளை, எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக, மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இதனால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா.சம்பந்தனும், எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த அனுரகுமார திசநாயக்கவும் பதவியிழந்துள்ளனர்.
முன்னதாக அதிபர் செயலகத்தில் இன்று முற்பகல் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சபாநாயகரின் முடிவுக்கு ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி, சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்த மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என்று தேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அதேவேளை, கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகியவர்கள், பொதுஜன முன்னணியில் இருக்கிறார்களா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கிறார்களா என்பதை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும், அந்த குழுவின் கருத்து பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தை தள்ளிப் போடுமாறும் கேட்டுக் கொண்டார்