படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை!!
17 Dec,2018
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று முற்பகல் அதிபர் செயலகத்தில் பதவியேற்றார்.
இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
அப்போது அவர், “குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழுகின்றனர்.
இந்த நிலையில், புலிகளுக்கு எதிராகப் போரிட்ட அரச படையினரை மாத்திரம் ஏன் குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்?
சிறையில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுவிப்பதாயின், தடுப்புக்காவலில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரும் அவ்வாறே கையாளப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தடுப்பில் உள்ள இராணுவத்தினரை விடுவித்தால் மட்டுமே, சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளிப்பேன் என்று கூறினார் என்று நிகழ்வில் பங்கேற்ற ஐதேக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களால் தான், இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாகவும், குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா அதிபர், அந்த நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் உறுப்பினர்களை கைது செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.