தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் – சஜித்
16 Dec,2018
இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சர்வாதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயக போராட்டமானது நீதித்துறையினூடாக இன்று வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் நன்றித் தெரிவிக்கின்றேன்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும்.
அதிகார வெறி பிடித்தவர்களில் முக்கிய புள்ளியாக இருந்தவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையடுத்து பதவியைத் துறந்துள்ளார். இனிமேலாவது இவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.
அரச அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றியதும் எதிர்த்தரப்பு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது போன்று நாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை.
அரசமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே தீர்ப்புக்கள் மூலம் கூறப்பட்டுள்ளது.
நாங்கள் நாட்டின் தற்காலிகப் பொறுப்பாளர்கள். ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலின்போது எவரும் மாறலாம்.
நாம் சிறந்த முன்மாதிரியான அரசாகப் பயணிக்கத் தீர்மானித்துள்ளோம். இடம்பெற்ற தவறுகளைப் புரிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்கவுள்ளோம் என்றார்.