சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்
08 Dec,2018
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.
“வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, ”பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, குறிப்பாக ஐரோப்பாவில் இருந்தான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று சிறிலங்கன் விமானசேவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளன.
இதுகுறித்து, கருத்து வெளியிட்ட சிறிலங்கா விடுதிகள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த,“ சிலர் ரத்துச் செய்திருக்கிறார்கள். சிலர் சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் தொடர்பான முன்பதிவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த நேரத்தில் முன்பதிவு மெதுவாகி விட்டது, இது கவலை தருக்கிறது.
தற்போதைய நெருக்கடி இழுத்தடிக்கப்படும் போது,அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் ரத்துச் செய்கிறார்கள்” எனஅவர் கூறினார்.