மைத்திரி பைத்தியக்காரன்- சிறைக்கு செல்ல நேரிடும் பொன்சேகா!!
05 Dec,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் ஆகியோர் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதி போல் செயற்பட்டிருக்க மாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரியிருக்கமாட்டேன். வாரம் ஒருதடவை வெளிநாட்டுக்குப் பயணம் செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை ‘ஜனாதிபதி தாத்தா’ என்று பெயர் வைத்து மகளின் பெயரில் வெளியிட்டிருக்க மாட்டேன். பைத்தியக்காரனான ஜனாதிபதி இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சை பெற்றாலும் பரவாயில்லை. அதற்கு ஏற்ற வகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம்” – என்றார்.
ஜனாதிபதி மைத்திரி சிறைக்கு செல்ல நேரிடும் – பொன்சேகா!!
நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சட்டம் பொதுவானது என தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறை செல்லக்கூட நேரிடும் என கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு இடம்பெற முன்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரி அவரது சொந்த சொத்தை பங்கிடுவது போல்தான் அரசாங்கத்தை செயற்படுத்தி வருகிறார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அவர் சிறை செல்லக்கூட நேரிடும்.
காலையில் கூறும் கருத்தை இரவிலேயே மாற்றி விடுகிறார். இரவில் கூறியதை காலையில் மறந்து விடுகிறார். இந்தப் பிரச்சினையைத் தோற்றுவித்தவரே, இன்னும் சில நாட்களில் பிரச்சினைத் தீர்ந்துவிடும் எனக் கூறுகிறார். இவையெல்லாம் மிகவும் வேடிக்கையானது.
இவ்வாறான ஒருவரை பொது வேட்பாளரைக் கொண்டுவந்து கட்சியும் நாடும் அழிந்துவிட்டது. இது ஒரு சிறந்த பாடமாகும்.” என கூறினார்.