யுவதியை கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது ; யுவதி மீட்பு
02 Dec,2018
விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்குச் சென்ற யுவதி ஒருவர் இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியைக் கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு அருகில் முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு விரதம் பிடிப்பதற்காக சென்றிருந்த நிலையில் கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.