வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி, மஹிந்தவை பிரதமராக்கினாராம்!
02 Dec,2018
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின் சொத்துகளை பாதுகாக்கவும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், நாட்டில் சமஸ்டி ஆட்சி உருவாகுவதை தடுக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை தடுக்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை அகற்றி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினார்.
எனவே இதனை பொறுப்பேற்காது இருந்திருந்தால் அடுத்த ஏழு, எட்டு மாதங்களில் பிரதமர் பதவி இலகுவாக கிடைத்திருக்கும். அதனை விட்டு தாய் நாட்டுக்காக அவர் இதனை பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்திற்குள் சண்டியர்களும் வருகை தந்துள்ளனர். ஆகவே தற்போது நாடாளுமன்றத்தில் முன்னெடக்கப்படும் எந்த நடவடிக்கையும் சட்டரீதியானதல்ல.
ஜனாதிபதியால் பிரதமர் ஒரவர் நியமிக்கப்பட்டால் அதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சபாநாயகர் அதனை செய்ய தவறியுள்ளார்“ என தெரிவித்துள்ளார்.