நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை
25 Nov,2018
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம், சிறிலங்கா அதிபர் நேற்று வெளியிட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே, சாகல ரத்நாயக்க தனது கீச்சகப் பதிவுகளின் மூலம், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில், உயர்மட்ட விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் செய்த தலையீடுகளை நான் ஒருபோதும், பகிரங்கமாகப் பேசியது கிடையாது,
ஆனால், இந்த காட்டுத்தனமான குற்றச்சாட்டுகள் தொடருமானால், உயர்மட்ட விசாரணைகளில் யார், எப்போது, எங்கே, எப்படித் தலையீடுகளைச் செய்தார்கள் என்ற விபரங்களை நான் வெளிப்படுத்த நேரிடும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊழல் நடந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டுவாரேயானால், அப்போது கூட்டு அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக இருந்த அவருக்கும் கூட அதில் சமமான பங்கு உண்டு.
அதிபர் ஆணைக்குழு நியமிக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், இந்த விசாரணைகளில் இருந்து அவரும் தப்பிக்க முடியாது.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து, பாதுகாப்புச் செயலருக்கு, காவல்துறை மா அதிபர் அனுப்பிய கடிதமே, சிறிலங்கா அதிபர் உத்தரவு பிறப்பித்தார் என்பதை காட்டுகிறது.
சிறிலங்கா அதிபரின் தலையீடுகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம். இது மூன்றரை ஆண்டு பழக்கத்தின் தொடர்ச்சி தான்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில், பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா நீர்கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்று குறித்து, பாதுகாப்புச் செயலருக்கு, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது