பிக்கு தூக்கிட்டு தற்கொலை!!
23 Nov,2018
வியட்நாமிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 108 பேரிடம் பெற்றுக்கொண்ட பணத்தை அவர்கள் திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்தமையால் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கலஹா நில்லம்பை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நில்லம்பை ஸ்ரீ ஆனந்தாராமைய விகாரையின் 28 வயதுடைய பிக்குவே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவர்.
குறித்த பிக்கு கொழும்பைச் சேர்ந்த பிறிதொரு பிக்குவின் வழிகாட்டலின் பேரில் வியட்நாம் நாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி நில்லம்பை பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 600 பேரிடம் குறித்த விகாரையில் வைத்து நேர்முகப் பரீட்சையினை மேற்கொண்டு அதில் 108 பேரை தேர்வு செய்து வெளிநாட்டுக்குச் செல்ல தேவையான ஆவணங்களை தயாரிக்க நபர் ஒருவரிடமிருந்து தலா 8500 ரூபா வீதம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .
எனினும் பிக்கு வாக்குறுதி வழங்கியது போல் பல மாதங்கள் ஆகியும் 108 பேரில் ஒருவரையேனும் வியாட்நாமுக்கு அனுப்ப முடியாமல் போனதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டு தொல்லை கொடுத்து வந்தமையால் அவர்களுக்கு முகம் கொடுக்க முடியாத காரணத்தினாலேயே தற்கொலை செய்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவதினத்தன்று காலைவேளையில் விகாரையின் அருகில் அமைந்துள்ள மடுவமொன்றில் காவித் துணியினை கயிற்றினை போல் திரித்து அதன் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் செய்து வருகின்றனர்.