ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை : சபாநாயகர்
18 Nov,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என சபாநாயகர் அறிவித்துள்ளார்.இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த விசேட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.